ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

சனி, 19 டிசம்பர், 2009

குறைதீர் நாள் சிறப்புக் கூட்டம் , அரசு வேளாண் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏக்கருக்கு ரூ.6 லட்சம் மின்திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்



அரியலூர்:ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூரில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசியது:ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன்: ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்திற்கு சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்று ரூ.25 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. அதன் விலையை உயர்த்தி தர கோரிக்கை விடுத்தும் ரூ.25 ஆயிரம் இறுதி தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். அந்த பணத்தை கொண்டு மாற்று இடம் வாங்க முடியாத நிலையில் அவர்களது வாழ்வாதாரம் சீரழிந்துள்ளது.

அரசு ரூ.25 ஆயிரம் கொடுத்து வாங்கிய நிலத்திற்குள் பல லட்சம் மதிப்புள்ள "கருப்புத் தங்கம்' என கூறப்படும் நிலக்கரி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளை கலெக்டர் தலைமையில் அழைத்துப் பேசி நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை விலை அளிக்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் படித்த இளைஞருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், குழந்தைகளுக்கு கல்வி உத்தரவாதமும், நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் ஒரு வீடும் அளிக்க வேண்டும்.

அரியலூர் பிச்சைப்பிள்ளை: ஆயில் இன்ஜின் வாங்கினால் மானியம் வழங்கப்படுவது குறித்து விரிவாக விளக்க வேண்டும். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை. எனவே வங்கி அதிகாரிகள், விவசாயிகளை அழைத்து கல்விக்கடன் கூட்டம் நடத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை அரசிடம் நிதி பெற்று விரைவில் செப்பனிட வேண்டும்.

விளந்தை ஜெயச்சந்திரன்: ஆண்டிமடத்தில் வேளாண் அலுவலகம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுவதற்கு இடம் இருந்தும் அது ஒதுக்கப்படாததால் அலுவலகம் கட்டும் பணி துவக்கப்படாமல் உள்ளது. எனவே விரைவில் இடத்தை ஒதுக்கி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஆண்டு வேளாண்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் ரூ.20 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். என்னென்ன பணிகள் நடந்தது என்பது குறித்து கலெக்டர் ஆய்வு நடத்த வேண்டும்.

ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் ஏரி பிளாட் போட்டு விற்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி ஏரியை காப்பாற்ற வேண்டும்.வி.சி.அம்பேத்கர் வழியன் பேசுகையில், புதிதாக திருமணமானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை விரைவில் வழங்க வேண்டும் என்றார். செங்கமுத்து பேசுகையில், அரியலூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு படிப்பிற்கும் எவ்வளவு கடன் வசதி என்பதை வங்கிகள் அறிவிக்க வேண்டும் என்றார். இந்த ஆண்டு விவசாயம் அதிகம்: பின்னர் கலெக்டர்ஆபிரகாம் பதில்அளித்து பேசியதாவது, மாவட்டத்தில் வேளாண்மையை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு வரிசை நெல் களை எடுக்கும் கருவி ரூ.12,500 மானியத்திலும், இயந்திரத்தின் மூலம் பல வரிசை நெல் களை எடுக்கும் கருவி ரூ.20 ஆயிரம் மானியத்திலும், சீனா மாடல் நெல் நடவு இயந்திரம் ரூ.75 ஆயிரம் மானியத்திலும், 10 எச்.பி.க்கு குறைவாக களை எடுக்கும் கருவி ரூ.50 ஆயிரம் மானியத்திலும், பழ மரங்களுக்கு விசை தெளிப்பான் ரூ.20 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

விலை உயர்ந்த வேளாண் கருவிகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் மற்றும் மக்காச்சோளம் அறுவடை இயந்திரம் ஆகியன 33 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. நீர்வள, நிலவளத் திட்டத்தில் ஆணைவாரி ஓடை உபவடிவ நிலப்பகுதியில் உள்ள ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்படும் தெளிப்பு நீர் பாசன அமைப்பிற்கு 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

சிறுபாசனத் திட்டத்தில் விசைத் துளைக்கருவி, நில பவுதீக ஆய்வு கருவி, கைத்துளைக் கருவி போன்றவை வாடகைக்கும் விடப்படுகின்றன. செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.19.20 லட்சம் வரப்பெற்று 36 பண்ணைக்குட்டைகள் ரூ.18 லட்சம் மதிப்பிலும், 4 ரீசார்ஜ் சாப்ட் ரூ.1.20 லட்சம் மதிப்பிலும் அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.நடப்பாண்டில் அரியலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி 21,227 எக்டர் பரப்பளவிலும், கரும்பு விவசாயம் 7,069 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 6,900 எக்டர் பரப்பளவிலும் பயிறு வகைகள் 853 எக்டர் பரப்பளவிலும் என கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிக அளவில் விவசாயம் செய்யப் பட்டுள்ளது.

மேலும் 274.99 மெட்ரிக் டன் விதை நெல்லும், சிறுதானியங்கள் 9,548 மெட்ரிக் டன்னும்,பயிறு வகைகள் 5,537 மெட்ரிக் டன்னும், நிலக்கடலை 34,151 மெட்ரிக் டன்னும் விதை விநியோகம் செய்யப்பட்டு, போதுமான அளவிற்கு விநியோகம் செய்ய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.சம்பா விவசாயத்திற்கு ஏற்ற உரங்கள் வேளாண் துறையில் விநியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் யூரியா 769 மெட்ரிக் டன்னும், டிஏபி 253 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 451மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 468 மெட்ரிக் டன்னும், சூப்பர் உரம் 73 மெட்ரிக் டன்னும் உள்ளன.

விவசாயிகளின் முதன்மை கோரிக்கையான மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அரியலூர் மாவட்டத்தில் உடனடியாக அமைக்கப்படும். பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளின் குறைகள் அடிப்படையில் சிறப்புக் கூட்டம் நடைபெறும். அதுபோல் வங்கியில் விவசாயிகளின் குறைகள் சம்பந்தமான சிறப்புக் கூட்டம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ராதாகிருஷ்ணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராமசாமி, வேளாண் உதவி இயக்குனர்கள் சந்தானகிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் சங்கர், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.