IAS தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!
அயராத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானா லும் கலெக்டராக முடியும்! என்கிறார்கள் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சாதித்துக் காட்டிய சமகால இளைஞர்கள்.
சென்ற ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), வெளியுறவுப் பணி (IFS), இந்திய வருவாய் பணி (IRS) உள்ளிட்ட இந்திய அரசின் உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்விற்கு மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய (Preliminary Exam) ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் பிரதானத் தேர்வுக்கு (Main Exam) தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அதிக ரேங்க் எடுத்தவர்களை கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தி 791 பேர் சிவில் சர்வீசஸ் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 625 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள். இதில் 364 பேர் பொதுப்பிரிவு (13 பேர் உடல் ஊனமுற்றோர்), 236 பேர் இதர பிற்படுத்தப் பட்டோர் (7 பேர் உடல் ஊனமுற்றோர்), 130 பேர் அட்டவணை வகுப்பினர், 61 பேர் அட்ட வணை பழங்குடியினர் ஆவர்.
வழக்கம் போல இந்த வருடமும் ஐஐடியில் படிக்கும் மாணவர்களே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ரூர்க்கி ஐஐடியில் பொறியியல் படித்த சுப்ரா சக்சேனா முதலிடத்தை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சரண்தீப் கவுர் பிரார் இரண் டாம் இடம் பெற்றார்.
அவ்வகையில் நம் தமிழக மாணவர்களும் எவ்வகையிலும் சளைத்தவர்கலல்ல என்பதை நிரூபித்துள்ளனர். 96 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்றவர்களில் மூவர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும் முதல் முயற்சியிலேயே வென்றவர்களும் ஏராளம். மெட்ரி குலேஷன் பள்ளிதான் சிறந்த கல்வியை தருகிறது என ஆங்கில மோகத்துடன் உள்ள தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்த பலபேர் ஐஏஎஸ் தேர்வில் வென்றிருப்பது சாதனையிலும் சாதனை.
தமிழகத்தில் முதலிடம்
ஐஏஎஸ் தேர்வில் இந்தியா அளவில் ஓன்பதாவது ரேங்கையும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பெற்றவர் சசிகாந்த் செந்தில். சொந்த ஊர் செங்கல்பட்டு. தந்தை சண்முகம் ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி தாயார் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தமது கடின உழைப்பின் மூலம் ஐஏஎஸ் ஆகியுள் ளார். இதைப்பற்றி சசிகாந்த் செந்தில் ""இந்த ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கணேஷ் என்பவர் மூலமாகவும், தமிழ்நாடு அரசு கோச்சிங் சென்டரிலும் பயிற்சிப் பெற்றேன். இதன் மூலம் வெற்றிப் பெற்றேன். இந்தத் தேர்வை எதிர்கொள்ள
விரும்பும் மாணவர்கள், மனதளவில் முதலில் தயாராகிவிட வேண்டும். பின்னர் விரிவாக பயில வேண்டும'' என்றார்.
பரோட்டா கடையில் வேலை செய்து கொண்டு, படித்தேன் ஐஏஎஸ் ஆனேன்!
சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியா அளவில் 53-வது ரேங்க் பெற்றவர் வீரபாண்டியன். மதுரையில் உள்ள அருந்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்தவர். தந்தை கணேசன் தலையில் சுமந்து பித்தளை வியாபாரம் செய்து வருகிறார். தாயார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப் புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் தனது தளராத முயற்சியாளும் கடின உழைப்பினாலும் இத்தேர்வில் வெற்றிப்பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார். அதுப்பற்றி வீரபாண்டியன் குறிப்பிடும்போது
""நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். பொருளாதார வசதி கிடையாது. ஆனாலும் படிக்க வேண் டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. மதுரை மாநகராட்சி பள்ளியில் பனிரெண் டாம் வகுப்புவரை படித்தேன். படிப்பு செலவுக்கு பணமில்லாத தால் பரோட்டா கடையில் பகுதிநேர வேலை செய்துக் கொண்டே படித்தேன். பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றேன். இதற்காக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு பெற்றேன். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் சேர்ந்தேன். அங்கும் இலவசமாகத்தான் படித்தேன். இதையடுத்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து இரண்டாமாண்டு பி.எல். படித்துக் கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வெழுதி வெற்றிப் பெற்றேன். எனது முயற்சியும், உழைப்பும் வீண்போகவில்லை. அதன் பரிசாக ஐ.ஏ.எஸ் கிடைத்தள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உண்மையாக பணிபுரிவேன்'' என்றார். எந்த இலட்சியத்தையும் அடைய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை வீரப்பாண்டியன் நிரூபித்து உள்ளார்.
முதல் முயற்சியிலேயே வெற்றி!
அகில இந்திய அளவில் 95-வது இடத்தைப் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சுப்ரஜா, என்ஜினியரிங் பட்டதாரியான இவர், தமது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி இவர் கூறுகையில், ""கல்லூரி இறுதியாண்டு படித்தபோது ஐ.ஏ.எஸ் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. நான் புரபஷனல் கோர்ஸ் படித்திருந்தாலும் என் விருப்பத்திற்கு பெற்றோர் தடைவிதிக்கவில்லை. அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்தேன். அதற்கு முதல்நிலைத் தேர்வில் புவியியல் விருப்பப்பாடமாகவும், பிரதானத் தேர்வில் புவியியல் மற்றும் உள வியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித் தேன். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கர் சார் எனக்கு வழிகாட்டினார். அதனால் எளிதாக வெற்றிப் பெற்றேன். ஐ.ஏ.எஸ் தான் முதல் விருப்பம். அது இல்லா விட்டால் ஐஆர்எஸ் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். இந்த தேர்வு கடினமாக நடத்தப்பட்டாலும் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்ந்தெடுத்து, மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால், யார் வேண்டுமா னாலும் வெற்றி பெறலாம்'' என்றார். முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது. சரியான திட்டமிடலும் கடின உழைப்பும் இருந்தால்தான் முதல் முயற்சியில் வெற்றிப் பெற முடியும்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.
உங்களை பற்றி சொல்லுங்கள்?
நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.
என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?
பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.
தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.
நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?
நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.
"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக