ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

ஞாயிறு, 10 மே, 2009

எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகியவை இனி தமிழக சிறுநகர,கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா?






சமீபத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு) , ஏ ஐ ஈஈஈ (அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு) நடந்த தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தேன். ஒன்று மதுரையிலும் மற்றொன்று திருச்சியிலும்.

இரண்டு மையங்களிலும் கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம், தன் வாழ்நாளில் பொய்யே பேசாதவர்களின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது. சிறுநகர மாணவர்களின் சதவிகிதம் உண்மை மட்டும் பேசும் அரசியல்வாதிகளின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது.

ஏன் அவர்கள் இந்த தேர்வுகளில்

பங்கெடுத்துக் கொள்வதில்லை?

1. இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லை.


2. இதைப் பற்றி சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு
போதுமான விழிப்புணர்வு இல்லை.

3. கிராமப்புற மாணவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி, படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் ஆகியவை இதைப் பற்றி பெரிய அளவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை அரிதாக சில பக்கங்களை ஒதுக்குகின்றன (கேரியர் கைடன்ஸ் என்ற பெயரில்). ஆனாலும் அவை உற்சாகப் படுத்தும்படி எழுதுவதில்லை. தொடர்ச்சியாகவும் அவர்கள் இப்பணியைச் செய்வதில்லை. எனவே இதழ்களை தவறவிடுபவர்களுக்கு செய்திகள் சேர்வதில்லை.

4. நாளிதழ்கள் தேர்வு பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அதன் முக்கியத்துவம், வாய்ப்பு பற்றி அவை வாய் திறப்பதில்லை.

5. இம்மாதிரியான தேர்வுகள் அனைத்தும் கேந்திரிய வித்யாலயா மாதிரியான பள்ளிகளில் மட்டும் நடத்தப் படுகின்றன. எனவே அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வு எளிதாக ஏற்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிகளையும் மையங்களாகக் கொண்டு இந்தத் தேர்வுகளை நடத்தினால் அங்குள்ளவர்களுக்கும் இது எதற்க்கு நடக்கிறது, படித்தால் என்னவாகலாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படும். இது மற்றவர்களுக்கும் பரவும்.

6. தமிழக அரசின் நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்க்காக பலரும் படித்தார்கள். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேச்ச மாதிரியும் ஆச்சு என்ற கணக்கில் அப்போது பலர் இந்த தேர்வுகளுக்கும் படித்தார்கள். ஆனால் இங்கே நுழைவுத் தேர்வு தளர்த்தப் பட்டதும் இதற்க்கு மட்டும் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து விட்டது.

7. மேலும் தமிழக அரசின் நுழைவுத் தேர்வு காரணமாக பல கோச்சிங் செண்டர்கள் இங்கே இருந்தன. தொழில் போட்டியின் காரணமாக அவர்கள் குறைந்த கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் இப்போது அவை அருகி விட்டன. மதுரை,திருச்சி ஆகியவற்றில் ஏ ஐ ஈ ஈ ஈ நுழைவுத் தேர்வு கோச்சிங்கிக்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள். இவற்றை கிராமப் புற மக்களால் செலுத்த முடிவதில்லை.

8. மேலும் அப்போது சிறு நகரங்களிலும் கோச்சிங் செண்டர்கள் இருந்தன. சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் எளிதில் அங்கு சென்று படித்தார்கள். அவைகள் இப்போது மூடப்பட்டுள்ளதால் எல்லோரும் மாவட்டத் தலைநகருக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அவர்களின் பொருளாதாரம் சம்மதிப்பதில்லை.

ஏன் கோச்சிங் செண்டர்கள் பற்றி அதிக கவலை எனில்,

சமீபத்தில் ஐஐடி சென்னையின் டீன் அவர்கள் அளித்த பேட்டியில் “ இப்போது தேர்வாகிவரும் மாணவர்களிடம் ரா இண்டலிஜெண்ஸ் இல்லை, பயிற்றுவிக்கப்பட்ட திறமையே காணப்படுகிறது? என சொல்லியிருந்தார். எனவே நம் மாணவர்களும் முயற்ச்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அறியாமையின் காரணமாக மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கற்க்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....


1) நமது எம் பிக்களிடம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை பரவலாக கொண்டுவரச் சொல்லி வற்புறுத்தலாம். மக்கள் தொகைக்கு ஏற்பவும், மத்திய அரசு பணியாளர்களின் என்னிக்கைக்கு ஏற்பவும் தான் அப்பள்ளிகள் அமைக்கப்படும். ஆனால் அந்த விகிதத்திலாவது பள்ளிகள் இங்கு அமைக்கப் பட்டுள்ளனவா என்று சரிபார்க்கச் சொல்லலாம்.


2) ஏனெனில் இதுவரை அர்ஜூன் சிங், முரளி மனோகர் ஜோசி என வட மாநிலத்தவர்களே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் அந்த துறையின் செயல்பாடுகள், அதன் பலம் ஆகியவை நம் எம் பிக் களுக்கு தெரிவதில்லை. அந்த துறையில் உள்ள ஓட்டைகள் மூலம் வட மாநில மக்கள் நமக்குச் சேரவேண்டியவற்றை அபகரிப்பது நடந்து வருகிறது.

3) பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கு தேர்தல் நடைபெறும்போது நம் எம்பிக்கள் ரயில்வே,தொலைத் தொடர்பு போன்ற பசையுள்ள நிலை குழுக்களுக்கே முன்னுரிமை கொடுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் மனதுடையோர் மனித வள மேம்பாட்டு அமைச்சக நிலைக்குழுக்களுக்கு போட்டியிடலாம்.

4) எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் சர்வ சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்களை இங்கு ஆக்க பூர்வமாக செயல்படுத்தலாம். புது திட்டங்களையும் நமக்கு கொண்டு வரலாம்.

5) சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது எம் பிக்கள் சாதனைப் பட்டியலைப் பார்த்தேன். அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நிழற்குடை, பள்ளி கட்டடம், தெரு விளக்கு போன்ற உள்ளாட்சித் துறைப் பணிகளை. அவை மத்திய அரசின் எம் பி நிதியில் செய்யப் படும் கடமைகள். எப்படியும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். கமிசனும் கிடைக்கும். ஆனால் ஒரு எம் பி என்பவர் தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்களைப் பெற்றுத் தருபவராகவே இருக்க வேண்டும். அம்மாதிரி எம்பிக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

6) எனவே வெற்றி பெறும் எம்பிக்களை சந்தித்து, மத்திய அரசின் துணையுடன் இங்கு கல்வியை வளர்க்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

7) தற்போது புதிதாக மூன்று ஐஐடிக்கள், ஐஐஐடி டி&எம் ஆகியவை அமைக்கப் படவுள்ளன. இதிலும் ஓபிசிக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. எனவே மத்திய அரசின் ஓபிசி சான்றிதழை வாங்கி விண்ணப்பிக்கவும். நான் சந்தித்த பலர், தமிழக அரசின் பிசி, எம்பிசி சான்றிதழ்கள் போதுமென நினைத்து மத்திய அரசின் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பித்துள்ளார்கள்.

8) உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இதைப் பற்றிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக