ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

திங்கள், 26 அக்டோபர், 2009

ஓ... கனடா-4

முன்னைய பாகங்கள் இங்கே.My Photo

முகவர்களுக்குக் காசு கொடுத்து பெரிய தொகை ஒன்றையும், என்னுடைய வாழ்க்கையையும் பணயம் வைக்க உறவுகள் விரும்பாததால், அவர்கள் தேர்ந்து எடுத்த முறை படிப்பதற்காக என்று சொல்லி என்னை இலங்கையை விட்டு அப்புறப்படுத்துவது. அதற்கான வழிமுறை இவ்வாறாக இருந்தது.

முதலில் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறவேண்டி இருந்தது. என்னிடம் அதற்குரிய TOFEL, IELTS போன்ற ஆங்கிலத் தகைமகள் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய க.பொ.த. உயர்தர, சாதாரணதர பெறுபேற்று ஆவணங்களில் இருந்த ஆங்கிலத்துக்கான அதிவிசேட சித்தி அவர்களை ஏமாற்றிவிட்டது போலும், அனுமதி கிடைத்தது, ஷெரிடான் கல்லூரியில் மின் பொறியியல் (3 வருட டிப்ளோமா) படிக்க. அத்துடன் ஆறு மாதங்கள் ஆங்கிலமும் படிக்க வேண்டும். ஆக, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரியில் அனுமதி என்கிற கனேடிய குடிவரவு, குடியகல்வு அமைச்சின் முதலாவதும், முக்கியமானதுமான நிபந்தனையைச் செவ்வனே நிறைவேற்றியாயிற்று. இது பற்றிய விபரங்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகுதான் கனேடிய தூதரகங்களில் போய் மேற்படி Student Visa பெறுவதற்கான செயல்முறை ஆரம்பமாகிறது. இதற்கான அனுமதி (கனடாவுக்கு வெளியே இருந்து) கோரும்போது பின்வரும் பத்து விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதாக கனேடியக் குடிவரவு குடியகல்வு அமைச்சு அறிவுறுத்துகிறது.
  1. இந்த அனுமதி கிடைப்பதற்கான செயல்முறை எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருக்கும் கனேடியத் தூதரகத்தில் மாணவர் அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம். அதாவது, செப்ரெம்பரில் ஆரம்பமாகிற கற்கை நெறிக்கு ஒருவர் ஓகஸ்ற் 20ம் திகதிக்குப் பிறகு கொழும்பில் வைத்து விண்ணப்பித்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதையே அவர் சண்டிகாரில் விண்ணப்பித்தால், இரண்டு நாளைக்குள்ளாகவே அவரது விண்ணப்பம் மீதான சாதகமான முடிவு கிடைக்கலாம். (மேலதிக விபரங்கள் இங்கே)
  2. விசாவுக்கு உரிய விண்ணப்பப் படிவத்தைத் இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் கனேடியத் தூதரகங்களில் நேரடியாகப் போய்ப் பெற்றுக்கொள்ளலாம். இணையத்தில் உங்களுக்குத் தேவையான படிவங்களை pdf கோப்புகளாகத் தரவிறக்கும் வசதி கனடா குடிவரவு குடியகல்வு அமைச்சின் இணையத்தளத்தில் இருக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்வதற்குரிய அறிவுறுத்தல்களும் கூடவே இருக்கின்றன.
  3. அடுத்ததாக, எந்தக் கனேடியத் தூதரகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்யவேண்டும். உங்கள் நாட்டுக்கோ, அல்லது உங்கள் பிராந்தியத்துக்கோ பொறுப்பாக இருக்கிற ஒரு தூதரகத்தில் நீங்கள் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். கனடாவுக்கு வெளியே தூதரகங்கள் இருக்கும் இடங்களை இங்கே காணலாம்.
  4. Student Visa விண்ணப்பத்துக்குத் என்னென்ன ஆவணங்கள் தேவை என அறிந்து, அவற்றைச் சேர்க்கவேண்டும்.
  5. நீங்கள் படிப்பதற்காக அனுமதி பெற்றிருக்கும் கல்வி நிலையம் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் எனில், அதற்கென தனியான சில நடைமுறைகள் இருக்கின்றன. CAQ என்கிற ஒரு அனுமதிச் சான்றிதழை கியூபெக் மாநிலக் குடிவரவுத் திணைக்களத்தில் இருந்து பெறவேண்டி இருக்கும்.
  6. எல்லா ஆவணங்களையும் தயார்செய்து, விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுவிட்டீர்களா? இனிமேல் கவனமாக விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள். கறுத்த மையால் தெளிவாகவும், முழுமையாகவும், உண்மையாகவும் விண்ணப்பப் படிவத்தில் அவர்கள் கேட்டிருக்கும் விபரங்களை நிரப்புங்கள்.
  7. இந்த அனுமதிக் கோரிக்கைக்கு சில கட்டணங்கள் இருக்கின்றன. இணையம் மூலமாகவும் கட்டணம் செலுத்தப்படலாம். உறுதிப்படுத்திய காசோலை, வரைவோலை போன்ற முறைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் கணித்து, அவர்கள் சொல்கிற ஏதாவது ஒரு முறையில், உங்களுடைய நாட்டின் பணத்தில் இந்தக் கட்டணம் செலுத்தப்படலாம்.
  8. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது அவசியமாகிறது. அதற்கும் ஒரு படிவம் இருக்கிறது. அதன் மூலம், நீங்கள் தேவையான படிவங்கள், மற்றும் ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்திருக்கிறீர்களா என உறுதிசெய்து கொள்ளலாம்.
  9. இதன் பின்னர் உங்களுடைய படிவத்தை உரிய தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அமெரிக்கா, கிரீன்லாந்து, Saint Pierre and Miquelon ஆகிய நாடுகளின் பிரஜாவுரிமை உடையவர் என்றால், கனடாவிற்குள் எந்த வழியாக நுழைகிறீர்களோ அந்த வழியில் உள்ள எல்லைகளில் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உடனடியாகவே அனுமதி பெறலாம்.
  10. அதன் பின்னர், உங்கள் நாட்டுக் காவல்துறையினரிடம் பெறக்கூடிய சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழ் ஒப்படைக்கப்பட வேண்டும். பெரும்பாலான நாடுகளில் காவல்துறைச் சான்றிதழ் கோரப்படுவது இல்லை. (இலங்கையில் என்னிடம் கோரப்படவில்லை. ஆயினும் ஒன்றைக் காவலுக்காக எடுத்தேன். அது ஒரு பெரிய கதை). மருத்துவச் சான்றிதழ் கிட்டத்தட்ட எல்லா நாடுகளில் இருக்கும் தூதரகங்களாலும் கோரப்படுகிறது. மருத்துவச் சான்றிதழ் பெறுவது பற்றிய முழுமையான விபரங்களை இங்கேயும், காவல்துறைச் சான்றிதழ் பெறுவதற்கான முழுமையான நடைமுறைகளை இங்கேயும் காணலாம்.
அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முன்னர் செய்ய வேண்டியவை இவ்வளவும். விண்ணப்பித்த பின் என்ன நடக்கும், எனக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள், வரும் பதிவுகளில்.

நன்றி :கிருத்திகன் குமாரசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக