படுகொலைகளை மறைக்க பிரபாகரனை சுற்றிவளைத்துவிட்டதாக பொய்ப்பிரச்சாரம்:பழ.நெடுமாறன்
சிங்கள ராணுவத்தின் வெறித்தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக்குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகின்றது.
2 ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயல்கின்றது.
2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது.
25 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற வகையிலும் எதிர்வரும் ஏப்ரல் 24 ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 6 மணிவரை தமிழகம் எங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி வணக்கம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.
அமைதி வணக்கம் செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் வணக்கம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக